பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல்காந்தி சரியான ஆள்இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
மதுரையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா எட்வர்டு மன்ற நூலகத்தை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆய்வு மேற்கொண்டார். பல ஆண்டுகளாக
தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து வருவதாக கூறி இந்த ஆய்வை மேற்கொண்டார். சீமான்
ஆய்வு செய்வதையொட்டி அங்கு 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
விக்டோரியா எட்வர்டு மன்றம் பூட்டி இருந்த காரணத்தினால் சீமான் உள்ளே செல்ல
இயலவில்லை. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், முதலமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் எனக் கூறுகிறார். அவர் என்னவாக பாடுபடுகிறார்.
முதலமைச்சர் பாடுபடுபவராக இருந்தால் அதனை எங்களை போன்ற பொதுவானவர்கள், மக்கள் சொல்ல வேண்டும் என சாடினார்.
80 சதவீத பிரச்சனைகளை, தீர்த்து வைத்ததாக முதலமைச்சர் தெரிவித்து வரும் நிலையில், 8 பிரச்சனைகளையாவது தீர்த்தார்களா என்பது தான் கேள்வி என்றார். தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக கொடுக்கும் கல்வியை தரமாக கொடுங்கள். மாணவிகளை கையேந்த வைப்பது புதுமை அல்ல. பெண்களுக்கு கல்வியை கொடுத்து வளமாக்க வேண்டும்.

பெண்கள் யாரையும் சார்ந்து இல்லாமல் தன்காலில் நின்று உழைக்கும், வாழும் நிலையை உருவாக்குவதே புதுமை பெண் திட்டம் என்றார். குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்திற்கே நிதி வலிமை, நிதி ஆதாரம் இல்லை என கூறினார்கள். ஆனால் கல்லூரி மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்க 696 கோடி ரூபாய் எப்படி வந்தது.
1000 ரூபாயை வைத்து ஒரு சிலிண்டர் வாங்க முடியுமா அல்ல 1000- ரூபாயை வைத்து
எந்தக்கல்லூரியிலாவது சேர முடியுமா என கேள்வி எழுப்பினார்.
ஷாருக்கான் சல்மான்கான் போன்ற நடிகர் நடிகைகளை தான் மாடல்
என்பார்கள். ஆனால் இங்கு திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு பல ஆயிரம் கோடியில் விளம்பரம் மட்டும் தான் நடக்கிறது என சாடினார்.
இந்தியாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்து மாற்றத்தை கொண்டு வராத ராகுல்காந்தி நடை
பயணம் மேற்கொண்டு மாற்றம் கொண்டு வருவாரா? என்ன மாற்றம் வரப்போகிறது. காலையும், மாலையும் நடப்பதால் அவருக்கு வேண்டுமானால் மாற்றம் வரலாம். மோடியை எதிர்க்க ஆள் வேண்டும் அதற்கு ராகுல் சரியான ஆள் இல்லை என்ற சீமான், நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்







