ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்து நேரில் விளக்கமளித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதாக தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் (என்சிபிசிஆர்) தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திங்கள் கிழமை இரவு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்தியுடன் குழந்தைகள் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்புவதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை. நாங்கள் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களைச் சந்தித்து இதில் மக்கள் பிரிதிநிதித்துவச் சட்டமோ, தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவோ இல்லை என்று விளக்கம் அளித்தோம். இருந்தாலும் தேர்தல் ஆணையம் ஏன் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது என்று புரியவில்லை. என்சிபிசிஆர்-ன் குழந்தைத்தனமான செயலைக் காட்டும் விரிவான ஆவணங்களை கொடுத்துள்ளோம். யாத்திரைக்கு குழந்தைகள் பயன்படுத்தப்படுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி ஒரு ஓவியப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் ஒரு 15 நிமிடம் கலந்து கொள்ள சென்றிருந்தார். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். பெற்றோர்களுடன் குழந்தைகளும் வருகிறார்கள். அவர்கள் ராகுல் காந்தியுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இது ஒன்றும் சட்டவிரோதம் இல்லை என்று” தெரிவித்தார்.







