காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி செப்டம்பர் 7-ம் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி – காஷ்மீர் வரை 3,500 கிமீ நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். தமிழ்நாட்டில் 4 நாட்கள் 59 கிமீ நடைபயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் பேரணி தமிழ்நாட்டில் 59 கிலோமீட்டர் நடைபெற உள்ளது என்றார். அதற்கு பின்பு கேரளாவுக்கு சென்று மீண்டும் கேரள தமிழக எல்லையான பாலக்காட்டிற்கு வர உள்ளார் என தெரிவித்தார். நீலகிரி அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் நடைபயண பேரணி நடைபெற உள்ளது.
கூட்டணி கட்சிகளை அழைப்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும் என தெரிவித்த அவர், பிரதமர் மோடி சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது என குற்றம்சாட்டினார். சுதந்திர தின விழா அன்று பிரதமர் மோடி பெண்கள் பாதுகாப்பு குறித்து உரையாற்றினார். ஆனால் குஜராத் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை அனுபவித்தவர்கள் விடுதலை ஆகியுள்ளார்.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சட்டத்தின்படி வெளியில் வர முடியாது. ஆனால் குஜராத் மாநில அரசு எந்த அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது என்று தெரியவில்லை என கேள்வி எழுப்பிய தினேஷ் குண்டுராவ், பிரதமர் மோடி போலியாக நடித்து வருவதாகவும் விமர்சித்தார்.
– இரா.நம்பிராஜன்








