இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையிலும், மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றும் திரட்டும் வகையிலும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி “இந்திய ஒற்றுமை” நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, என பல்வேறு மாநிலங்கள் வழியாக 100 நாட்களை கடந்து தொடரும் “இந்திய ஒற்றுமை” பயணம் தற்போது தலைநகர் டெல்லியை அடைந்துள்ளது.
இந்நிலையில் ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வழங்க கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டன. டெல்லியில் நடைபெற்ற பயணத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தத டெல்லி காவல்துறை தவறிவிட்டது. ராகுல் காந்திக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள நிலையில் உரிய பாதுகாப்பு வழங்கபடவில்லை. ஹரியாணாவில் இருந்து தவறான நபர்கள் சிலர் நடைபயணத்தில் நுழைந்ததாக ஹரியாணா உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சோஹ்னா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய இரு தலைவர்களும் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளனர். 2013ல் நக்சல் தாக்குதலில் சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே, வரவிருக்கும் நாட்களில் பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் என தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதால் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.








