நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிக்கு பொறுபேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சோனம் வாங்சுக்கின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் டெல்லி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமமைக்கு அழைத்துச் சென்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் கரப்பான் பூச்சி கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது பேரணி சென்ற மாணவர்கள் மீது துணை ராணுவத்தினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பலரும் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிஜேபி கட்சியினருக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லி பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக சென்று சிஜேபி இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் மீது ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். அப்போது காங்கிரஸ் எம்.பிக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ராகுல்காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “நேற்று இளம் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைச் செயல்கள் குறித்துப் பதிலளிக்கக் கோரி, நாங்கள் பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றோம்.
இவ்விவகாரத்தில் எந்தப் பொறுப்பையும் ஏற்கவோ அல்லது நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவோ அரசு விரும்பவில்லை.
இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.




