வெற்றியுடன் விடைபெற்ற ராகுல் டிராவிட் – டி20 உலகக்கோப்பையை சமர்பித்த இந்திய அணி!

இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவி காலம் முடிவடைந்த நிலையில் டி20 உலக கோப்பையுடன் விடைபெற்றார். அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி…

இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவி காலம் முடிவடைந்த நிலையில் டி20 உலக கோப்பையுடன் விடைபெற்றார்.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி நேற்று (ஜூன் 29) நடைபெற்றது. பார்படாஸின் பிரிட்ஜ்டவுன் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து தென்னாப்பிரிக்க அணி 177 ரன்கள் இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்தது. தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களை மட்டுமே சேர்த்தது. இறுதியாக 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை ருசித்து டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.

2007இல் வெஸ்ட்ஸ் இண்டீஸில் நடைபெற்ற ஒரு நாள் கோப்பை தொடரில் ராகுல் டிராவிட் கேப்டன்சியில் இந்தியா லீக் சுற்றிலேயே வெளியேறியது. தற்போது அதே கோப்பையை விட்ட இடத்தில் பயிற்சியாளராக அதை தொட்டுள்ளார் ராகுல் டிராவிட். தற்போது 17 ஆண்டு கால சோகத்தில் இருந்து விமோசனம் கிடைத்துள்ளது. டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பரிக்காவை வீழ்த்திய இந்தியா இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் ஆகியுள்ளது.

2013ல் தோனி தலைமையில் வென்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பையே இந்தியா கடைசியாக வென்ற ஐசிசி கோப்பையாக இருந்தது. இதன்பின்னர் 2014 டி20 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2021 மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை, 2023 ஒரு நாள் உலகக் கோப்பை என இந்தியாவுக்கு ஐந்து முறை ஐசிசி கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு அமைந்தபோதிலும் நழுவவிட்டது. தற்போது ஆறாவது முயற்சியில் அதை செய்து காட்டியுள்ளது.

ராகுல் டிராவிட்:

2007இல் ஒரு நாள் உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸில் வைத்து நடைபெற்றது. அப்போது ராகுல் டிராவிட் தலைமையிலான இந்தியா லீக் சுற்றிலேயே வெளியேறியது. அத்துடன் இந்தியாவுக்கு மோசமான உலகக் கோப்பை தொடராக இது அமைந்தது. ஆனால், அதே ஆண்டில் முதல் முறையாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் ஆனது.

இருப்பினும் இதன் பின்னர் 2010இல் இதே வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 6 சுற்று வரை மட்டுமே இந்தியா முன்னேறியது. தற்போது 17 ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸில் மீண்டும் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருக்கும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்துள்ளார். இதையடுத்து 2007இல் பெற்ற அவமானத்தை துடைத்து எறியும் விதமாக கோப்பையை விட்ட இடத்தில் மீண்டும் தொட்டு பயிற்சியாளராக கைப்பற்றியுள்ளார் ராகுல் டிராவிட்.

விடை பெற்றார் ராகுல் டிராவிட்:

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தனது கடைசி போட்டியில் இணைந்திருந்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் அணியை வெற்றி பெற வைத்ததோடு, 17 ஆண்டு கனவை நனவாக்கியதோடு, 11 ஆண்டுக்கு தண்ணி காட்டி வந்த ஐசிசி கோப்பையை வென்று கொடுத்து ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார். தற்போது வெற்றியுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெறுகிறார்.

டி20 உலகக் கோப்பையை பெற்ற பின்னர் ராகுல் டிராவிட்டிடம் கோப்பையை கொடுத்தபோது, வீரர்களுடன் இணைந்து தனது ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி மகிழ்ந்தார். இதன் விடியோவும் பார்ப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இந்தியாவுக்கு யு19 உலகக் கோப்பையை வென்று கொடுத்திருந்த நிலையில், தற்போது டி20 உலகக் கோப்பையும் பெற்று தந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.