நீதிபதி நியமனம் குறித்த கேள்வி: மாநிலங்களவையில் அனுமதி மறுத்த மத்திய அமைச்சர்

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஜவகர் சிர்கார் எழுப்பிய கேள்விக்கு, அவை உறுப்பினர் அல்லாத ஒருவர் குறித்து பேச கூடாது என…

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஜவகர் சிர்கார் எழுப்பிய கேள்விக்கு, அவை உறுப்பினர் அல்லாத ஒருவர் குறித்து பேச கூடாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார். 

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று விக்டோரியா  கவுரி உள்ளிட்ட 5 பேரை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம்  நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்தநிலையில், உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி  7-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி எப்படி, எதனடிப்படையில் நியமிக்கப்பட்டார்? என மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஜவகர் சிர்கார் கேள்வி எழுப்பினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நியாயமான வழிமுறைகளை பின்பற்றி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட ஒருவர் குறித்து இங்கு விவாதிக்க கூடாது. இந்த அவையில் உறுப்பினர் அல்லாத ஒருவர் குறித்து பேச வேண்டாம் என அறிவுறுத்தினார்.

இதையடுத்து பேசிய மாநிலங்களவை தலைவர் ஜெய்தீப் தன்கர், இந்த விவகாரத்தில், குடியரசுத் தலைவர் நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார். உச்சநீதிமன்றமும் அதன் கருத்தை கூறியுள்ளது. ஆகவே இதுகுறித்து பேச வேண்டாம் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஜவகர் சிர்கார் கேள்விக்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜு, இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் போது கவனமாக இருக்க வேண்டும்.கருத்து வேறுபாடுகள் என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும். கருத்து வேறுபாடுகள் இருப்பின் அதற்கு தீர்வு காண வேண்டும். இது நாடாளுமன்ற அவையில் அரசாங்கத்திடம் கேட்டு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வி அல்ல என பதில் அளித்தார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.