” பாரத் குறித்த கேள்வி – எனக்கு இந்தியா தான் பிடிக்கும் “ – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செல்லூர் ராஜு பேட்டி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறும்…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.

எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில்  கூட்டத்தில் அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள் , மாவட்ட செயலாளர்கள் , அதிமுக மதுரை மாநாட்டுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மதுரை மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

” மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சிறப்பாக நடந்தது. கலைஞர் மிகப்பெரிய அரசியல் வித்தகர், பழுத்த பழம் ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தை கலைஞர் வழியில் தொடர்வோம். எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது, பொதுச் செயலாளரும் அறிவுறுத்தி உள்ளார்.” என தெரிவித்தார்.

இதன் பின்னர் பாரத் என்ற பெயர் உங்களுக்கு சம்மதமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ “ எனக்கு இந்தியா தான் பிடிக்கும் ஆனால் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.” என தெரிவித்தார்.

மேலும் பாரத் என பெயர் மாற்றப்பட்டால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயர் பாரத் என மாற்றப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ ” எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக உள்ளதே அது. அவை நடக்கும் போது பார்க்கலாம் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.