டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஜப்பானின் டோக்கியோவில் இன்று பிற்பகல் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையே பேட்மிண்டன் காலிறுதிப் போட்டி நடைப்பெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் உலக தரவரிசைப் பட்டியிலில் 7வது இடத்தில் உள்ள பி.வி.சிந்துவும், ஜப்பான் சார்பில் தரவரிசைப் பட்டியலில் 5ம் இடத்தில் உள்ள அகனே யமாகுஷியும் விளையாடினர். இந்த போட்டியில் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் எளிதில் வென்ற பி.வி. சிந்து இரண்டாவது செட்டை வெல்ல கடுமையாக போராடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த போட்டி ஜப்பானில் நடைபெறுவதால் அந்நாட்டு வீராங்கனையான யமாகுஷி இரண்டாவது செட்டை கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தார். இதனால் பி.வி. சிந்து அடித்த கடினமான ஷாட்களையும் எளிதாக திருப்பி அடித்து பி.வி.சிந்துவுக்கு நெருக்கடி கொடுத்தார். இரண்டாவது செட்டில் 11-6 என்ற கணக்கில் பி.வி.சிந்து முன்னணியில் இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் 16-15 என்ற கணக்கில் யமாகுஷி முன்னிலை பெற்றார். தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய யமாகுஷி 20-18 என்ற கணக்கில் முன்னிலை பெற்று 2வது செட்டை கைப்பற்றும் நிலைக்கு சென்றார். ஏற்கெனவே முதல் செட்டை பி.வி.சிந்து கைப்பற்றியுள்ள நிலையில் இரண்டாவது செட்டை யமாகுஷி கைப்பற்றினால் இருவரும் மூன்றாவது செட்டை விளையாடி வெற்றியை தீர்மானிக்க வேண்டிவரும்.

முதல் இரண்டு செட்களையும் தொடர்ந்து கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்பதால் பி.வி.சிந்து வழக்கமான தனது ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தி 22-20 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி அசத்தினார். இதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை யமாகுஷியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுப்பெற்றார்.
கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீராங்கனை கரோலின் மேரினிடம் இறுதிப்போட்டியில் நூலிழையில் வெற்றியை தவறவிட்டு வெள்ளி பதக்கத்தை வென்றார் பி.வி.சிந்து. இந்நிலையில் இந்த முறை தக்கப் பதக்கத்தை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது அவரது பதக்க கனவிற்கு வலு சேர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து யாரும் பாட்மிண்டன் பிரிவில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லாத நிலையில் இந்தமுறை பி.வி.சிந்து தங்கம் வென்றால் அது வரலாற்று சாதனை மட்டும் அல்லாமல், பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு முன்மாதிரியாக அமையும் என்பது நிச்சயம்.