இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் சிறிது, சிறிதாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடும் பணிகளில் தீவிரம் ஆகியவற்றின் காரணமாக கொரோனா தொற்றுப் பரவல் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்திருந்தது.
இந்த நிலையில் ஜூலை மாத த்தில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் சிறிது, சிறிதாக அதிகரித்து வருவது தெரியவந்திருக்கிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த மூன்று நாட்களாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பில் 37 சதவீதமாகும். இதனால் கேரளாவில் ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது.
அதே போல வடகிழக்கு மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. கர்நாடகாவில் கடந்த புதன் கிழமை கொரோனா தொற்று எண்ணிக்கை 1531 ஆக இருந்தது. வியாழக்கிழமையன்று புதிதாக தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2052 ஆக அதிகரித்தது. இது புதன் கிழமையை விட 34 சதவீதம் அதிகமாகும். மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின் படி நாடு முழுவதும் 45.55 கோடி பேர் கொரோனா தொற்று தடுப்பூசி போட்டுள்ளனர்.








