புதுச்சேரியில் விளையாட்டுக்கு தனித்துறை: விரைவில் அரசாணை என அமைச்சர் நமச்சிவாயம் தகவல்!

புதுச்சேரியில் விளையாட்டுக்கென தனித்துறை அமைப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என ஆசிய  சாம்பியன் ஹாக்கி  கோப்பை அறிமுக விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். இந்தியாவில் முதல்முறையாக 7-வது ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி…

புதுச்சேரியில் விளையாட்டுக்கென தனித்துறை அமைப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என ஆசிய  சாம்பியன் ஹாக்கி  கோப்பை அறிமுக விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

இந்தியாவில் முதல்முறையாக 7-வது ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் நோக்கில் ஆசிய சாம்பியன் கோப்பை இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் “லீ புதுச்சேரி ஹாக்கி சங்கம்” சார்பில் ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி ஒலிம்பிக் சங்கத் தலைவரும், அமைச்சருமான ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஹாக்கி விளையாட்டை விளையாடி, ஆசிய சேம்பியன் கோப்பையை விளையாட்டு வீரர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினர்.

விழாவில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் விளையாட்டுக்கு என தனித்துறை அமைப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் ரூ. 7 கோடி செலவில் ஹாக்கி டர்ப் சரி செய்யப்படும் எனவும் உறுதி அளித்த அவர் நிலுவையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றார்.  இதேபோல் கிராமப்புறங்களில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான நடவடிக்கையும் அரசு எடுத்து வருவதாக நமச்சிவாயம் தெரிவித்தார்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.