தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகள், நாட்டுப்புறக் கலைகள், இசை, நாடகம் உள்ளிட்ட கலை வடிவங்களைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக செயல்படும் முக்கியமான அரசு கலாச்சார அமைப்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் உள்ளது. இந்த அமைப்பு 1955-ல் ‘தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர் 1973-ல் ‘தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில், 2021-ம் ஆண்டு நடிகர் வாகை சந்திரசேகர் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு இசையமைப்பாளர் தேவா தலைவராக இருந்தார். தற்போது தமிழ்நாடு அரசு, நாட்டுப்புறப் பாடகரான புஷ்பவனம் குப்புசாமியை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புஷ்பவனம் குப்புசாமி நாட்டுப்புற இசை மற்றும் கிராமியக் கலைத்துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வருபவர். திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி நாட்டுப்புற மற்றும் பக்திப் பாடல்களாலும் பரவலாக அறியப்பட்டவர். புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள புஷ்பவனம் குப்புசாமி நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.




