புதுச்சேரி ; உடைகிறதா திமுக – காங்கிரஸ் கூட்டணி…….? – முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை…!

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நிலவுவதால் புதுவை திமுக நிர்வாகிகளுடன் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ் நாட்டை போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. என். ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவுற்ற நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.

காலாப்பட்டு, ராஜ்பவன், நெல்லித்தோப்பு உள்ளிட்ட திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 5 தொகுதிகளை  காங்கிரஸ் கோருவதால் கூட்டணியை இறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பதிலும் இரு கட்சியினருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. காங்கிரஸ், திமுக இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனைடையே நேற்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுவை தனியார் ஓட்டலில் புதுச்சேரி திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் புதுவை மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்திருந்தனர். ஆனால் இரவு 10 மணி வரை காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனை தொடர்ந்து ஜெகத்ரட்சகன் எம்பி நேற்றிரவு மாநில அமைப்பாளர் சிவாவுடன் அவசரமாக சென்னைக்கு சென்றார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் உடனான கூட்டணியில் தொடர்வதா…? அல்லது தனித்து போட்டியிடுவதா….? என்பது குறித்து புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா ஆகியோருடன் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

புதுவையில் வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை (திங்கட்கிழமை) தான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.