புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் புதுச்சேரி அரசு -முதலமைச்சர் ரங்கசாமி

புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ளப் புதுச்சேரி அரசு தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  வங்கக்கடலில் உருவாக்கியுள்ள காற்றடித்துத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்,…

புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ளப் புதுச்சேரி அரசு தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

வங்கக்கடலில் உருவாக்கியுள்ள காற்றடித்துத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்வது, மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை கூட்டம் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொறுப்பு தலைமை செயலாளர் ராஜு, மாவட்ட ஆட்சியர் வல்லவன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை அதிகாரிகள், வனத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, வங்கக் கடலில் உருவாக உள்ள புயலால் கனமழை மற்றும் காற்று அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், புதுச்சேரி மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க கூட்டம் நடைபெற்றது என தெரிவித்தார்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை வாரியாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் , மழை, காற்று பலமாக வீசும் பட்சத்தில் அதை கையால மின்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் முடக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், அனைத்து துறையும் விரைவாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்பு குழு புதுச்சேரி மற்றும் காரைக்கால் வந்துள்ளது.  இந்த மழை மற்றும் புயலை எதிர்கொள்ள தேவையான நிதி கொடுக்கப்படும் என்றார்.

மேலும், பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 238 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 75000 நபர்களுக்கு அட்சய பாத்திரம் மற்றும் உள்ளாட்சி துறை மூலம் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் பத்திரமாக கரை திரும்பியுள்ளதாகவும்,  அனைத்து படகுகளும் பாதுகாப்பாக துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழை மற்றும் புயலை எதிர்கொள்ள அரசு துறை ஊழியர்கள் விடுப்பு இல்லாமல் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.