புதுச்சேரியில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து குறைந்து வரக்கூடிய நிலையில், தற்போது பல மாநிலங்கள் மற்றும் யூனியன்…

புதுச்சேரியில் ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து குறைந்து வரக்கூடிய நிலையில், தற்போது பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமலில் இருக்கும் தளர்வுகள் சில நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கெனவே உள்ள இரவு ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடக்கூடிய படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை 50% நபர்களுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களில் தொடங்கி தனியார் ஊழியர்கள் உட்பட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக, அரசியல், பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதியின்றி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம் என்றும், பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் என்றும், அதன் ஊழியர்களும் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர், “புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கோவிட் மருத்துவமனையில் 21 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5 குழந்தைகள் கொரோனா தொற்று ஏற்பட்ட தாய்க்கு பிறந்த குழந்தைகள், 16 குழந்தைகள் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் 12 குழந்தைகள் 5 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். அனைத்து குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள். கொரோனா குழந்தைகளை பாதிக்கும் என்பதால் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் குழந்தைகளுக்கு தேவையான படுக்கைகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், குழந்தைகளுக்கு ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும். புதுச்சேரியில் இதுவரை டெங்குவால் 5 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, “புதுச்சேரியில் 21 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் கவனமாகவும் எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும். குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறித்த முழுமையான தகவல் அடங்கிய ஆய்வறிக்கை அளிக்க வேண்டும். சூழ்நிலையைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்” என கோவிட் மேலாண்மை சீராய்வுக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.