தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கும் பகுதிகளில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையமும், ஊராட்சித்துறையும் பணிகளை தொடங்கியுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடைபெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 34 பயணாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊரக பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டம், சாலை வசதி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மட்டுமல்ல முதன்மை மாநிலமாகவும் மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றுள்ளார் என தெரிவித்தார். மேலும் கொரோனாவின் தாக்கத்தை குறைக்க போர்கால அடிப்படையில் அரசின் அனைத்து துறைகளும் முடுக்கிவிடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா நோய் தொற்று புதியதாக பாதிக்காத வண்ணம் அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் பெரிய கருப்பன், ஆட்சி பொறுப்பேற்றபோது 36,000ஆக இருந்த பாதிப்பு அரசின் சிறப்பான நடவடிக்கையால் 2000ஆக குறைந்துள்ளது என தெரிவித்தார். கடந்த காலத்து ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை எனக் கூறிய அவர், திமுக நீதிமன்றத்தை நாடியதால் ஒருசில இடங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது எனவும் குறிப்பிட்டார். செப்டம்பர் 15 க்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசும் ஊரக வளர்ச்சிதுறையும் நடவடிக்கை எடுத்துவருகிறது என கூறினார்.







