புரட்டாசி மாதம் மற்றும் தசரா திருவிழா முடிவடைந்ததால் தூத்துக்குடி திரேஷ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க இன்று பொதுமக்கள் குவிந்தனர்.
புரட்டாசி மாதம் மற்றும் தசரா திருவிழா கொண்டாடப்பட்டதால் கடந்த 30 நாட்களாக
ஏராளமானோர் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை உண்டனர். இதனால் மீன்கள் விலை சற்று குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் தசரா திருவிழா முடிவுற்ற நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று காலை முதலே பொதுமக்கள் மீன்களை வாங்க குவிந்தனர்.
இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கிலோ 600 ரூபாய் விற்பனையான ஷீலா மீன் கிலோ 1000 ரூபாய் வரையும், கிலோ 250 ரூபாய் வரை விற்பனையான விளமீன்கள் கிலோ 400 ரூபாய் வரையும், பாறை மீன்கள் கிலோ ரூபாய் 300 ரூபாய் வரையும், இறால் கிலோ ரூபாய் 350 வரையும் விற்பனையானது. மீன்களின் விலை சற்று உயர்ந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரா. கௌரி







