என்னய்யா வாய்ஸ் இது?, யாரய்யா பாடுறது?. அந்தப் பொண்ணை போகச் சொல்லுங்கய்யா..என ஒலிப்பதிவாளரால் விரட்டப்பட்டார் அந்த இளம்பெண். பின்னொரு காலத்தில் அந்தப்பெண்ணின் குரலுக்கு ஊரே குலுங்கி ஆடியது. யார் அவர்?….
அன்றைய ஸ்டுடியோ ஒலிப்பதிவு அறை ஒன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. செந்தமிழ் தேன்மொழியாள் தந்த டி.ஆர்.மகாலிங்கத்தின் தெருப்பாடகன் என்ற திரைப்படத்திற்காக பாட வந்த ராஜேஸ்வரி என்பவரைத்தான் விரட்டி விட்டார் ஒலிப்பதிவாளர் ரங்கசாமி. (எம்.எஸ்.சுப்புலட்சுமி முதல் எம்.எல்.வசந்தகுமாரி, ஜிக்கி, லீலா உள்ளிட்டோரின் குரல்களை பதிவு செய்தவர் ரங்கசாமி)
விரட்டப்பட்ட அந்த இளம்பாடகி, பெருக்கெடுத்த கண்ணீருடன் வந்து தாயின் மடியில் முகம் புதைத்து விம்மினார். கலங்கிய மகளை ஆசுவாசப்படுத்திய அந்த தாய், உன் குரலுக்காக இந்த ஊரே காத்துக் கிடக்கப் போகுது பாரு என ஆறுதல் கூறினார். எல். ராஜேஸ்வரியாக இருந்து, தெய்வீக இயக்குநர் என கருதப்பட்ட ஏ.பி.நாகராஜனால் எல்.ஆர்.ஈஸ்வரி என சுருக்கப்பட்டவர்தான் அந்தப்பாடகி.
அந்தத் தாயின் வாக்கு பிற்காலத்தில் பலித்தது. தரையில் உட்கார்ந்திருந்த கூட்டம் மட்டுமின்றி பாடலைக்கேட்ட அத்தனை பேருமே ஆடத் தொடங்கினர். ர்ர்ருக்குமணியே… பப்பரப்பரபர… சக்கரப் பெண்ணே..பப்பரப்பரபர என உச்ச கட்டத்தில் பாடினாலும், வாராய் என் தோழீ வாராயோ என பாடினாலும் இப்படி ஒரு குரலா என கேட்டவர்கள், மனம் மயங்கித்தான் போனார்கள்.
பாசமலருக்காக ஜமுனா ராணியோடு பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் பாடலைப்பாடிய பின்னர், வாராய் என் தோழீ வாராயோ பாடல், ஈஸ்வரியை தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பிரபலமாக்கியது.
குடிமகனே…பெருங்குடி மகனே!..என சிவாஜிக்காக பாடினால், நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவதை சொன்னாள் என் இடது கண்ணும் துடித்தது என எம்ஜிஆருக்காக பாடினார்.
அடடா!.. என்ன அழகு அருகே வந்து பழகு … அனல் மேல் வைத்த மெழுகு அது போல் நீயும் உருகு என்ற கவிஞர் வாலியின் வரிகளில் ஈஸ்வரி உருகியதோடு நம்மையும் உருக வைத்திருப்பார்.
தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி என ஆறுதல் கூறிய ஈஸ்வரி, பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது என்றும் கலக்கியவர்.. உன் விழியும் என் வாளும் சந்தித்தால்?.பாடலில் கத்தி முனை காயம் செய்யும்…கண் பட்டால் மாயம் செய்யும் எனப்பாடி .மாயம் செய்தது ஈஸ்வரியின் குரல். கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா பாடலின் ஹம்மிங்குக்கு மயங்காத மனமுண்டா?
துள்ளுவதோ இளமை பாடலில் துள்ளிய து இளமை, அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் ரசிகர்களை பந்தாட வைத்தது. இது மாலை..நேரத்து மயக்கம் பாடல் மயங்கவைத்தால் மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு என எஸ்பிபியுடன் விளையாடியிருப்பார்.
சுசீலாவும் ஜானகியும் கொடிகட்டிப் பறந்தாலும், எலந்தப்பழ மயக்கமாக என்றும் நிலைத்து நிற்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி.







