டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளின் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் , பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டெல்லி காவல்துறை பதிலளிக்குமாறும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாத வகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைகளை முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து இன்று சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது..
“ இந்த போராட்டம் ஒவ்வொரு பெண்ணின் கண்ணியம், நேர்மை மற்றும் மரியாதைக்கான போராட்டமாகும். மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது நடவடிக்கை ஏன் தாமதமாகிறது. எது உண்மை என தெரிந்தும் அதன் மீது நடவடிக்கைள் எடுக்காமல் இருப்பது தான் கோழைத்தனம்.
அவர் மீது எஃப்ஐஆர் பதிவதற்கு ஏன் காலதமதம் ஆகிறது. எஃப்ஐஆர் பதிவதற்கு காலம் தாழ்த்திய அதிகாரி மீது ஐபிசி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க இயலும். ஒருவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் சொல்கிறது. ஆனால் அவரை இன்னும் கைது கூட செய்யவில்லை.
சட்டம் வலியவர்களுக்கும், உயர்ந்தவர்களுக்கும் ஒரே மாதிரியானவை இல்லையா.? குற்றம் சாட்டப்பட்ட நபர் உயர் பொறுப்பில் இருப்பதால் நியாமான விசாரணை நடைபெற சாத்தியமில்லை. எனவே இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை நடைபெற வேண்டும். பெண்களை கண்ணியமாக நடத்தாத சமூகம் அதள பாதாளத்திற்குதான் செல்லும்” என சித்து தெரிவித்தார்.







