20 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை தமிழ்நாடு அரசு முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கடலூர் மத்திய சிறை முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரம் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சிறப்பு
அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தமிழ் தேசிய விடுதலை இயக்க நிர்வாகிகள், விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.







