வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதா..? – சீமானுக்கு நெல்லை முபாரக் கேள்வி

வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது சீமானுக்கு அழகல்ல என எஸ்டிபிஐ கட்சியில் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறைக்கு எதிராகவும், பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் பாசிச…

வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது சீமானுக்கு அழகல்ல என எஸ்டிபிஐ கட்சியில் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் வன்முறைக்கு எதிராகவும், பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில் மதுரை கோ.புதூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பேசினார்.

இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த  எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்ததாவது…

” இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படும் போது சீமான் குரல் எழுப்பியிருக்கிறார். ஆனால் தற்போது சீமான் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என பேசியது ஆச்சர்யமாக உள்ளது. எந்த மக்களுக்காக போராடினாரோ அந்த மக்களை சீமான் குற்றவாளி கூண்டில் நிறுத்தி உள்ளார்.

சீமான் தனது பேச்சை திரும்பப் பெற்றிட வேண்டும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை குற்றம் சாட்டும் போக்கு வலதுசாரிகளுக்கே உரிய போக்கு. சீமானின் வலதுசாரி சிந்தனை மிகவும் ஆபத்தானது, சீமான் தனது பேச்சை திரும்ப பெற வேண்டும்.

மக்களுக்காக போராடி மக்களின் விருப்பதின் பேரில் மட்டுமே வாக்குகளை பெற முடியும். வாக்குகள் அளிக்கவில்லை என்பதற்க்காக மக்களை குற்றம் சாட்டுவது ஒரு தலைவனுக்கு அழகல்ல. 18 சதவீதம் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சாட்டும் சீமான் ஏன் 82 சதவீத பெரும்பான்மை மக்கள் மீது குற்றம் சாட்டவில்லை.

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யாமல் திமுக இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறது. திமுக வாக்குறுதி கொடுத்தது ஒன்று செயல்படுத்துவது ஒன்றாக உள்ளது. திமுகவின் 2 ஆண்டுகால ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு செய்தது என்ன..?

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானத்தை கூட திமுக நிறைவேற்றவில்லை. ஆதிநாதன் குழு அறிக்கை வந்தவுடன் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என திமுக கூறியது.  ஆதிநாதன் குழுவின் அறிக்கையை ஏன் திமுக வெளியிடவில்லை?

செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளையோட்டி 37 ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.சட்டமன்ற கூட்டுத்தொடரில் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.