ஆசியாவிலேயே யானைகள் பாதுகாப்பதில் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் முன்னோடியாக திகழ்வதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
முதுமலை சரணாலயத்தில் உள்ள தெப்பகாடு யானைகள் முகாமை பார்வையிட்டு யானை பராமரிப்பாளர்களான பொம்மன் பெள்ளி ஆகியோரை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நீலகிரி வந்தார். இதனைத் தொடர்ந்து யானைகள் முகாமை ஒரு மணி நேரம் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிஃபென் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடுகள், அதன் யானை பராமரிப்பு மேலாண்மைக்கு உலக அங்கீகாரம் பெற்றது பெருமைக்குரியது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, யானைகளை பாதுகாப்பது நமது பொறுப்பு என்று அவர் கூறினார். ஆசிய யானைகள் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் வகையில் தெப்பக்காடு யானைகள் முகாமில் “அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகத்தை” அரசு அமைத்து வருவதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் பழங்குடியின சமூகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும், அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்வதும், அடிப்படை வசதிகளை அவர்களுக்கு வழங்குவதும் மிகவும் முக்கியம் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். தெப்பக்காடு யானைகள் முகாமை நிர்வகிப்பதில் பெட்டகுரும்பர், காட்டுநாயக்கர் மற்றும் மலசர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவும் அனுபவமும் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.







