கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி போராட்டம்  – ஆர்.பி.உதயகுமார் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கைது!

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் உள்பட 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர்…

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் உள்பட 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி.  கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது.  எனவே அதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூலை 10 முதல் அமலுக்கு வந்ததால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன் தொடர்ச்சியாக நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி
மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தையில் 2020க்கு முன்பு போலவே சுங்கக் கட்டணம் இல்லாமல் செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி  உள்ளூர் வாகனங்கள் ஆதார் அட்டையை காண்பித்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் சுங்கச்சாவடியை அகற்றுவது குறித்து பேசவில்லை. இதனையடுத்து மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி திட்டமிட்டபடி பந்த் நடைபெறும் என கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு போராட்டக் குழு அறிவித்தது.

அதன்படி, சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் முழுவதும் வணிகர்கள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  போராட்டம் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்று கப்பலூர் சுங்கச்சாவடி அருகே 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சூழலில் கப்பலூர் சுங்கச்சாவடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், திருமங்கலம் நகர்ப் பகுதி முழுவதும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான மக்களை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி மேலக்கோட்டை பகுதியில் மதுரை – விருதுநகர் நான்கு வழி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  தற்போது கப்பலூர் சுங்கச்சாவடி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு போக்குவரத்து வழக்கமான நிலைக்கு திரும்பி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.