கேரள மாநிலத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக கோவையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் ஆட்சியர் சமீரன் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் போத்தனூர், சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், ஆர்.எஸ். புரம், காந்திபுரம், பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர், ஒண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
கோவை மாநகரில் 73 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 57.45 கிலோ பழைய சவர்மாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து 3 கடைகளில் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. 35 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது பிளாஸ்டிக் பயன்படுத்திய 3 கடைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து சவர்மா மற்றும் உணவுப் பொருட்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








