சிறந்த 3 தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த 3 பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக மொத்தம் 6 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலைகளை 9 விருதாளர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்த வகையில் முதலாவதாக எம்.சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்த புதிய கொள்கையை முதலமைச்சர் இன்று வெளியிட்டார். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை சார்பில் புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல்,கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.312.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, உறைவிந்து குச்சிகள் மற்றும் திரவ நைட்ரஜன் விநியோகம் செய்வதற்கான 16 வாகனங்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் பரிசளிப்பு நிகழ்வு தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. பட்டு விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த 3 பட்டு விவசாயிகள், சிறந்த 3 தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த 3 பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக மொத்தம் ரூ 6.75 இலட்சம் பரிசுத்தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சர் தா.மோ அன்பரசன், தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








