படப்பிடிப்புக்குள் பைக்கில் புகுந்த மர்மநபர் ஹீரோ, ஹீரோயின் மீது மோதிவிட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த நடிகைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள் ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நியூ டவுன் பகுதி சுற்றுச்சூழல் பூங்கா அருகில், வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் வெப் சீரிஸ் ஒன்றின் படப்பிடிப்பு நடந்தது. அதில் பிரபல மேற்கு வங்க நடிகை பிரியங்கா சர்காரும் நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தியும் நடித்துக்கொண்டிருந்தனர். படக்குழுவினர் படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்தனர்.
அப்போது அங்கு வேகமாக நுழைந்த பைக், படப்பிடிப்பு கருவிகள் மீது மோதிவிட்டு பாய்ந்தது.
பின்னர் அங்கு நின்றிருந்த நடிகை பிரியங்கா சர்க்கார், நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி மோதியது. இருவரும் கீழே விழுந்தனர். விபத்து ஏற்படுத்திய நபர், அங்கிருந்து பைக்கில் நிற்காமல் தப்பி சென்றுவிட்டார்.
விபத்தில் இடுப்பு மற்றும் கால்களில் படுகாயம் அடைந்த பிரியங்கா சர்க்கார், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். எலும்பில் உள்காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சனிக்கிழமை அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அர்ஜுன் சக்கரவர்த்திக்கு லேசான காயம் என்பதால் அவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இந்தச் சம்பவம் குறித்து கொல்கத்தா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
படப்பிடிப்புக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.








