தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் 10 – 20 வருடங்கள் வரை இருக்கும் 125 நபர்களுக்கு முன்கூட்டியே விடுதலை வழங்கக் கோரிய வழக்கில் சிறைத் துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை சின்னசொக்கிகுளத்தை சேர்ந்த கே.ஆர்.ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தமிழ்நாட்டில் மதுரை, வேலூர், பாளையங்கோட்டை உட்பட பல்வேறு சிறைகளிலுள்ள கைதிகளில் 125 நபர்கள் 10, 15, 20 ஆண்டுகள் என சிறையில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு 2018ம் ஆண்டு அரசு ஆணையின்படி முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சிறையில் இருக்கும் கைதிகளின் வழக்கை பொருத்தும், அவர்களின் நன்னடத்தையை பொருத்துமே அவர்களின் முன்கூட்டிய விடுதலை கணக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். அத்துடன், வழக்கு குறித்து தமிழக சிறைத் துறை கூடுதல் முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.