வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே தொடர்ந்து முன்னுரிமை அளிக்க தமிழ்நாடு அரசு உறுதிப்பூண்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தொழிற்பூங்காவில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலையின் மூலம் 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிறுவனம் தற்போது வரை தமிழ்நாட்டை சார்ந்த ஏறத்தாழ 5,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது.
வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்கும்போது பணியாளர் தேவையில் ஏறத்தாழ 80 சதவிகித பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை நியமிக்க அந்நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. பணிநியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு அரசு சார்பில் அந்நிறுவன அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது.
இதையடுத்து அந்நிறுவனம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதன்படி இந்த முகாமில் 7,559 பேர் பங்கேற்ற நிலையில், 1,993 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும், தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை, தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்”. இவ்வாறு தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்துள்ளார்.







