தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை படிப்படியாக குறையும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டின், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும், காரைக்காலின் ஒரு சில பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







