பிரதமரின் பயணம் ரத்தும்; எதிர்க்கட்சிகளின் கருத்துகளும்

இன்று பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு செல்ல முயன்று பாதியில் திரும்பி சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த கருத்து பகிர்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின்…

இன்று பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு செல்ல முயன்று பாதியில் திரும்பி சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த கருத்து பகிர்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்திற்கு பின்னர் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டார். இந்த ஆண்டு பஞ்சாப் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன.

பாஜகவும் தனது பரப்புரையை தீவிரப்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று பேரணியும் பல நலத் திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் பஞ்சாப் சென்றிருந்தார். மோசமான வானிலை மற்றும் விவசாயிகளின் போராட்டம் காரணமாக பிரதமரின் பயண பாதியில் கைவிடப்பட்டது.

இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அரசியல் தலைவர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா,

“காங்கிரஸ் எப்படி சிந்திக்கிறது மற்றும் செயல்படுகிறது என்பதற்கான முன்னோட்டம்தான் இன்று பஞ்சாபில் காங்கிரஸ் பின்பற்றிய பாணி” என்றும் “மக்களால் மீண்டும் மீண்டும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதால் அது அவர்களை பைத்தியக்காரத்தனத்தின் பாதைக்கு கொண்டு சென்றுள்ளது” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

https://twitter.com/AmitShah/status/1478713669382905860

மேலும், “பஞ்சாபில் இன்றைய பாதுகாப்பு மீறல் குறித்து விரிவான அறிக்கையை உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது. பிரதமரின் பயணத்தில் இதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகளை மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் கூறியுள்ளார்.

https://twitter.com/ANI/status/1478689005889748994

இதற்கு பதிலளிக்கும் விதமாக பஞ்சாப் அமைச்சர் ராஜ்குமார் வெர்கா, “பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு அம்சங்களில் எவ்வித குறைபாடுகளும் இல்லை. இவ்வாறு குற்றம் சாட்டுவது அடிப்படை ஆதாரமற்றது. உண்மை என்னவெனில், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் தோல்வியடைந்துள்ளது. இதை அறிந்துகொண்ட பிரதமர் திரும்பி சென்றுவிட்டார்” என்று கூறியுள்ளார்.

https://twitter.com/Murugan_MoS/status/1478701115168346113

பாஜவின் மத்திய இணையமைச்சரும் தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக தலைவருமான எல்.முருகன், “பஞ்சாப் மாநிலத்துக்கான ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கு பாரத பிரதமரின் வருகை சீர்குலைந்தது வருத்தமளிக்கிறது.” என்றும், “பஞ்சாபில் திறமையற்ற காங்கிரஸ் அரசியல் நிர்வாகத்தை வரலாறு மன்னிக்காது!” என்றும் ட்வீட் செய்துள்ளார்.

அதேபோல காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான ஜோதிமணி, “பிரதமர் மோடியை தங்கள் மாநிலத்திற்குள் நுழையவிடாமல் பஞ்சாப் விவசாயிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஓராண்டுகாலம் கொடுங்குளிரிலும், மழையிலும் போராடி 700 விவசாயிகள் மடிந்ததை, மோடி அமைச்சர் மகன் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்ததை விவசாயிகள் மறக்கவில்லை என்பதை மோடி உணரவேண்டும்.” என ட்வீட் செய்துள்ளார்.

https://twitter.com/jothims/status/1478742261508632576

மேலும், “மக்கள் எளியவர்களாக இருக்கலாம் ஆனால் வலிமையானவர்கள். அதிகாரம் வலிமையானதுபோல் தோன்றலாம். ஆனால் மக்கள் சக்தியின் முன் மண்டியிட்டே ஆகவேண்டும் என்பதே வரலாறு. 20 நிமிடம் காத்துக்கிடந்ததற்கே பிரதமரும் பாஜகவும் கொந்தளிக்கிறார்கள். ஓராண்டு போராடிய விவசாயிகள் எவ்வளவு துயரப் பட்டிருப்பார்கள்!” என்றும்,

“மாநிலஅரசு மட்டுமல்ல ஒன்றிய உள்துறை அமைச்சகமும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையும் பிரதமரின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள். மிக திட்டமிட்டு,கவனமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். பிரதமரின் பாதுகாப்பு அதி முக்கியமானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

https://twitter.com/jothims/status/1478750847869669378

பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு ,அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயணத்திட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலமைச்சரே நள்ளிரவுவரை பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கவனித்துள்ளார். இடையில் பயணத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் கூட்டத்தில் காலி நாற்காலிகள் மட்டும் கிடந்ததால் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது பயணத்திட்டம் மாற்றப்பட்டதற்கும், காலி நாற்காலிகளுக்கும் பஞ்சாப் முதலமைச்சர் எப்படி பொறுப்பேற்கமுடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கருத்துக்கள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.

 

தொகுப்பு: ஹேலி கார்த்திக்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.