சென்னையில் கத்திபாரா பகுதியில் சாலை வழிகாட்டி பலகை சரிந்து விபத்துக்கு உள்ளானதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகசுந்தரம் என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று மதியம் 3 மணியளவில் மாநகர பஸ் சென்றது. பரங்கிமலையில் இருந்து ஆலந்தூர் கத்திப்பாரா மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் பகுதிக்கு செல்ல சாலை வளைவில் திரும்பியபோது, திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமாக வைக்கப்பட்டிருந்த சாலை வழிக்காட்டி பெயர் பலகை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ராட்சத பெயர் பலகை பெயர்ந்து ஜிஎஸ்டி சாலையில் விழுந்தது. அப்போது சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் வேன் மீதும் விழுந்ததில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தலையில் படுகாயமடைந்த வாகன ஓட்டியை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகசுந்தரம் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் மெட்ரோ ரயில் பாலம் கட்டும்பணி நடந்த போது இரும்பு கம்பி சாலையில் விழுந்ததில் பைக்கில் சென்ற மென்பொறியாளர் பலியான சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







