பணயக்கைதிகள் விடுவிப்பிற்கு பிரதமர் மோடி வரவேற்பு..!

இஸ்ரேல்-காசா போரில் சிறைப்பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வந்தது. இந்த போரில் காசாவைச் சேர்ந்த 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால்  சர்வதேச நாடுகள் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வந்தன.

இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியின் பேரில் எகிப்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸிடம்  உயிருடன் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகள் 20 பேரை இன்று விடுவிக்கப்பட்டனர்.

இதற்கு இந்திய பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களின் விடுதலை அவர்களின் குடும்பங்களின் தைரியத்திற்கும், அதிபர் டிரம்பின்  அமைதி முயற்சிகளுக்கும், பிரதமர் நெதன்யாகுவின் உறுதிப்பாட்டிற்கும் ஒரு அஞ்சலியாக நிற்கிறது. பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவருவதற்கான அதிபர் டிரம்பின் உண்மையான முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.