கன்னியாகுமரியில் 3-ம் நாள் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 2வது நாளாக சூரிய உதயத்தை பார்வையிட்டார்.  இதனையடுத்து அவர் 3ம் நாள் தியானத்தை தொடங்கினார்.   நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக…

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 2வது நாளாக சூரிய உதயத்தை பார்வையிட்டார்.  இதனையடுத்து அவர் 3ம் நாள் தியானத்தை தொடங்கினார்.  

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் இன்று  நடைபெறுகிறது.  பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

7ம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை முடிவடைந்த நிலையில், வாரணாசியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து MI-17 வகை ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்.  கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை தியானத்தை தொடங்கினார்.

இந்த தியானம் இன்றுடன் நிறைவுபெறுகிறது.  அதன்பின் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, மாலை 4.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.  இதனிடையே,  கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று சூரிய உதயத்தை பார்வையிட்டார்.

இந்த நேரத்தில்,  கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அமைந்துள்ள கடற்பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும்,  குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.  பின்னர், சூரிய உதயம் பார்ப்பதற்கு மட்டும் சோதனைக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே,  விவேகானந்தர் மண்டபத்தில் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 2வது நாளாக சூரிய உதயத்தை பார்வையிட்டு வழிபாடு செய்தார்.  இதனையடுத்து பிரதமர் மோடி 3ம் நாள் தியானத்தை தொடங்கினார்.  தொடர்ந்து அவர் இன்று திருவள்ளுவர் சிலை,  காந்தி நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.