கேலோ இந்தியாவில் 11 சாதனைகள் முறியடித்த வீராங்கனைகள்- பிரதமர் மோடி பெருமிதம்

கேலோ இந்தியாவில் 11 சாதனைகளை நமது வீராங்கனைகள் முறியடித்து சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன்…

கேலோ இந்தியாவில் 11 சாதனைகளை நமது வீராங்கனைகள் முறியடித்து சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இது 90வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.

1975ஆம் ஆண்டு இதே ஜூன் மாதத்தில் தான் emergency எனப்படும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.  இதன்படி, தேசத்தின் குடிமக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. தேசத்தின் நீதிமன்றங்கள், அனைத்து சட்ட அமைப்புகள், பத்திரிக்கைகள், என அனைத்தின் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  தணிக்கை எந்த அளவுக்கு இருந்தது என்றால், அனுமதி பெறாமல் எந்த ஒன்றையும் அச்சிட முடியாது என்ற நிலைமை. மக்கள் ஜனநாயக முறைப்படி மீண்டும் மக்களாட்சியை நிறுவினார்கள்.

நமது நாடு இன்று பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகிறது. அந்த சாதனைகளில் ஒன்று தான் விண்வெளித்துறையில்  In-Space என்ற நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் விண்வெளித்துறையில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது. பல இளைஞர்களின் ஸ்டார்ட் அப்புகளின் புதிய எண்ணங்களையும், உற்சாகத்தையும் இதில் பார்க்க முடிகிறது.

சென்னை மற்றும் ஹைதராபாதைச் சேர்ந்த இரண்டு ஸ்டார்ட் அப்புகளான அக்னிகுல் மற்றும் ஸ்கைரூட்.  இந்த ஸ்டார்ட் அப்புகள் மேம்படுத்தி வரும் ஏவு வாகனங்களால் விண்வெளியில் சிறிய payloadகளை, அதாவது சுமைகளையும் கொண்டு செல்ல முடியும்.  இதனால் விண்ணில் ஏவுவதற்கான செலவு மிகவும் குறையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்ட விழாவான அமிர்த்மஹோத்சவையொட்டி 750 பள்ளி மாணவர்கள், 75 செயற்கைக்கோள்கள் தொடர்பாகப் பணியாற்றி வருகிறார்கள். இதில் பங்கேற்றுள்ள அதிகப்பட்ச மாணவர்கள் தேசத்தின் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமையளிக்கிறது.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நமது வெற்றியாளரான நீரஜ் சோப்ரா ஒன்றன் பின் ஒன்றாக புதிய புதிய வெற்றிகளை நிறுவிக் கொண்டிருக்கிறார். ஃபின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுக்களில் நீரஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.  இதுமட்டுமல்ல, ஈட்டி எறிதலில் அவரின் சாதனையை அவரே முறியடித்துள்ளார். Kuortaneவிளையாட்டுக்களில் நீரஜ், மீண்டும் தங்கம் வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்த முறை பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றன. இப்போட்டியில் நம் இளைஞர்கள் தங்களின் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தினர். அவர்கள் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முன்னுக்கு வரபோராடியவர்கள். அதன்பின் வெற்றிக்கான இந்த நிலைக்கு அவர்கள் வந்தடைந்து உள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் கூட பல சாதனைகளை நம்முடைய இளைஞர்கள் ஏற்படுத்தினர். மொத்தம் 12 சாதனைகள் இந்த முறை முறியடிக்கப்பட்டன. அவற்றில் 11 சாதனைகள் வீராங்கனைகள் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன என அவர் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

நம் நாட்டில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. பெண்கள் கிரிக்கெட் போட்டியின் நாயகியாக திகழ்ந்தவர் மிதாலி ராஜ். இவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நான் மிதாலிக்கு, அவரது வருங்காலத்திற்கான ஏராளமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.