“பிரதமர் மோடி மன்னரல்ல.. அவர் தெய்வக் குழந்தை..” – நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு!

“பிரதமர் மோடியை இனி மன்னர் என்றெல்லாம் சொல்ல முடியாது, அவர்தான் தெய்வக் குழந்தை ஆகிவிட்டாரே” என நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்று (மே 25) சென்னையில்…

“பிரதமர் மோடியை இனி மன்னர் என்றெல்லாம் சொல்ல முடியாது, அவர்தான் தெய்வக் குழந்தை ஆகிவிட்டாரே” என நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்று (மே 25) சென்னையில் உள்ள தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் அம்பேத்கர் சுடர் விருது நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், மார்க்ஸ் மணி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பெரியார் ஒளி விருது திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அருள்மொழி, காமராசர் கதிர் விருது பேராயர் எஸ்ரா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது ராஜ் கௌதமன், காயிதே மில்லத் விருது சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது சுப்பராயலு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ்,

“திருமாவளவன் போல என்னுடையது நீண்டகால கொள்கைப் போராட்டம் அல்ல. ஆனாலும் பலரும் என்னிடம் ‘ஏன் பேசுகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். உடலுக்கு ஒரு காயம் ஏற்பட்டால், நாம் சும்மா இருந்தால் கூட அந்த வலி தானாகவே குறைந்துவிடும். ஆனால் ஒரு சமுதாயத்துக்கு, ஒரு நாட்டுக்கு காயம் ஏற்பட்டால், நாம் பேசாமல் இருந்தால் அது அதிகம் ஆகிவிடும்.

சமூகத்திற்கும், நாட்டிற்கும் காயம் ஏற்பட்டால் பேசாமல் இருக்க முடியாது. கலைஞன் கோழையாகிவிட்டால் சமுதாயம் கோழையாகிவிடும். அம்பேத்கர் சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால், இந்த நாடு எப்படி இருந்திருக்கும் என‌ யோசித்தால் பயமாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாகத்தான் மன்னரை நான் எதிர்த்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போதெல்லாம் அவரை மன்னர் என்று சொல்லமுடியாது. மன்னிக்க வேண்டும். அவர்தான் தெய்வக் குழந்தையாகி விட்டாரே. பாஜகவினர் இனி மன்னர்கள் என சொல்ல முடியாது, அவர்கள் தெய்வ குழந்தைகள். இவர்கள் தவறு செய்தால் தவறு என வராது. தெய்வம் சோதிக்கிறது என நினைத்துக் கொள்ள வேண்டும்”

இவ்வாறு பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.