சீர்காழியை சேர்ந்த யோகா மாணவி சுபானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டு காசியில் நடைபெற்ற தமிழ் சங்கத்தில் மாணவி சுபானு அவர் தாய் சீதாவுடன் பங்கேற்று யோகாவில் சிவதாண்டவம் ஆடி அனைவரின் பாராட்டைப் பெற்றார். இந்நிலையில் மாணவி சுபானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து செய்தியை அனுப்பி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது..
”காசி தமிழ் சங்கமத்தில் நீங்கள் ஆர்வத்தோடு பங்கேற்றது குறித்த உங்களது கடிதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க காசியில் தமிழர்களின் வளமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் கொண்டாட்டத்தைக் காணும் இனிமையான அனுபவம் கங்கை, காவேரி போன்ற புனித நதிகளில் நீராடுவதைப் போன்றது.
‘ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்’ அதாவது ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்பது ஒரு சொற்றொடர் மட்டுமல்ல; பன்முகத் தன்மையைக் கொண்டாடும் இந்தியா போன்ற நாட்டிற்கு தனித்துவமான ஒரு வாழ்க்கை முறையாகும். சங்க இலக்கியத்தின் தொன்மையான காலகட்டத்தில் இருந்து நவீன கால காசி தமிழ் சங்கமம் வரை, அத்தகைய உடைக்க முடியாத ஒற்றுமை இழைகளால் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம்.
இதையும் படியுங்கள் : அடித்து ஆடும் இபிஎஸ்; நின்று, நிதானிக்கும் ஓபிஎஸ் – தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு யாருக்கு?
காசியும், தமிழகமும் பூகோள ரீதியாக ஒன்றுக்கொன்று தொலைவில் இருக்கலாம். ஆனால் அவை கலாச்சார மற்றும் ஆன்மீக ரீதியாக உறுதியாக, ஒற்றுமையாகப் பிணைந்துள்ளன. இந்த இரண்டு இடங்களிலும் உள்ள மக்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசலாம்.
ஆனால் அவர்களின் இதயங்கள் ஒரே மாதிரியான உணர்ச்சிகளுடன் துடிக்கின்றன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நமது உயரிய நோக்கத்தின் வேராக இந்த உணர்வுகள் அமைந்துள்ளன. காசி தமிழ் சங்கமத்தில் முழு மனதுடன் பங்கேற்ற தங்களின் பாங்கு நமது தனித்துவமான சமூக-கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கிறது.
இது போன்ற நமது முயற்சிகள், பல்வேறு பகுதிகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் மனதில் உள்ள ஆழமான உணர்வுகளை வெளிக்கொண்டுவந்து நமது தாய் நாட்டை மெய்யாகவே தனித்துவப்படுத்தும். உங்களின் வாழ்த்து செய்தி காசி தமிழ் சங்கமத்தின் மீதான உங்கள் அன்பையும், பாசத்தையும் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளன.
உங்களின் இந்த அன்பு, தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மேலும் வலுப்படுத்த, அயராது பாடுபட என்னுள் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
– யாழன்