நாதக தாராபுரம் வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்க! – கிருஷ்ணசாமி!

இன்று (அக்.20) கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் மற்றும் 10க்கும் மேற்பட்ட நாதக நிர்வாகிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் நடைபெற்ற தாராபுரம் சட்டமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட ஒரு நிகழ்வுக்காக பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தேர்தல் நேரங்களில் நடக்கக்கூடிய விதிமுறை மீறல்கள் அல்லது பெரிய கைது அளவுக்கு வன்முறை நிகழ்வுகள் ஏற்பட்டாலொழிய எவரும் செய்யப்படுவதில்லை. அப்படியிருக்க, நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேர்தல் முடிந்து ஏறக்குறைய இரண்டு வாரங்கள் கழித்து, இன்று ஆங்காங்கே கைது செய்யப்பட்டு, காவல் நிலையம் அழைத்து செல்லப்படுவதாக வரும் செய்திகள் கண்டனத்திற்குரியது. அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்.

ஒரு பக்கம் பெண்களுக்காகப் பரிந்து பேசிக்கொண்டு, இன்னொரு பக்கம் அதே பெண்களை காவல் துறையை வைத்து ஒடுக்குவது முறையல்ல. அதுவும் தேர்தல் நேரத்திலே பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு, முதலமைச்சருடைய வருகையைக் காரணம் காட்டி மறுக்கப்பட்டபோதுதான் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் குற்றமாகக் கருதினால், இந்தியாவில் யாரும் சுதந்திரமாக நடமாட முடியாது; பேச முடியாது. இது ஒரு போலீஸ் ஸ்டேட் ஆகிவிடும். அதனால் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளக் கூடாது, உடனடியாக அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.