இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், பொது சேவை உள்ளிட்ட முக்கிய துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இவ்விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2026- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் நாட்டை சேர்ந்த 5 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பத்ம விருது பெற்றவர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காக பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தங்களது பண்பு, அர்ப்பணிப்பு, சேவை ஆகியவை நமது சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன. இந்த கவுரவம் வரும் தலைமுறையினரைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் மேன்மையின் உணர்வைப் பிரதிபலிக்கிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







