தமிழ் நாடு விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகுகிறார் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்…!

பிரதமர் மோடி தமிழ் நாடு விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, தமிழகத்தில் இருந்து ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,545 என்ற விலையில் 96,879 டன் தோத்தாபுரி மாம்பழங்களும், மொத்த ஆதரவு விலை ரூ. 1,049 கோடி என்ற மதிப்பில் 8,226 டன் கொப்பரைத் தேங்காயும் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌகான் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்தையில் ஏற்பட்ட மாம்பழ விலை வீழ்ச்சியால், டன் கணக்கான மாம்பழங்களை குப்பையில் கொட்டி வந்த தமிழக விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றி, அவர்களுக்கு நியாயமான விலை கிடைக்க வழிவகை செய்துள்ள நமது மத்திய அரசின் இந்த முன்னெடுப்பால், தமிழக கிராமப்புறங்களின் பொருளாதாரம் வலுப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம், தமிழக விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கடமைப்பட்டுள்ளது!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.