முதலமைச்சரின் கருணைக்காக ஏங்கும் குடும்பம்

சென்னைக்கு சென்றால் எப்படியாவது பிழைத்து விடலாம். வறுமையில் சிக்கி தவிக்கும் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற கனவோடு வந்த இளைஞரின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போட்டது ராட்சத வழிகாட்டி பலகை. சென்னை மாநகர பேருந்து…

சென்னைக்கு சென்றால் எப்படியாவது பிழைத்து விடலாம். வறுமையில் சிக்கி தவிக்கும் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற கனவோடு வந்த இளைஞரின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போட்டது ராட்சத வழிகாட்டி பலகை. சென்னை மாநகர பேருந்து ராட்சத வழிகாட்டி பலகை மீது மோதியதில் அந்த இளைஞர் மட்டும் மறிக்கவில்லை. அவரது குழந்தைகளின் எதிர்காலமும் கேள்வி குறியாகியுள்ளது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மொத்த குடும்பமும் இடிந்து போய் உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடைக்கண் பார்வை இந்த குடும்பத்தின் மீது விழுமா ? இறந்த இளைஞர் குடும்பத்தின் நிலையை உணர்ந்து அரசு உதவ முன் வருமா என்ற கேள்வியோடு இந்த செய்தியை எழுதுகிறோம். இவர்களின் நிலையை நேரில் கண்டுவிட்டு இச்செய்தியை எழுதும் எம் கைகள் கூட நடுங்கின்றன.

சென்னையில் மாநகரப் பேருந்து மோதியதில் வழிகாட்டி பலகை ராட்சத கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் சிக்கி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மகமாயிபுரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (30) சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத தந்தை மற்றும் தாய், மனைவி‌, 4 வயதில் பெண் குழந்தையும் 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்களுக்கு வசிப்பதற்கு சரியான வீடு கூட இல்லை. மொத்த குடும்பமும் சண்முகசுந்தரத்தையே நம்பியிருந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.

சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எதிரே இருந்த சாலை வழிகாட்டி பலகையை தாங்கி நீர்க்கும் ராட்சத இரும்பு கம்பம் மீது தாம்பரத்திலிருந்து  கோயம்பேடு நோக்கி சென்ற மாநகரப் பேருந்து ஒன்று அதிவேகமாக மோதியது. இதனால் அந்த ராட்சத இரும்பு கம்பம் அடியோடு பெயர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனத்தின் மீது விழுந்தது.

இதில் ராட்சத இரும்பு கம்பத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற 30 வயது இளைஞர் சண்முகசுந்தரம் உட்பட 3 பேர் விபத்தில் சிக்கினர். இதில் சண்முக சுந்தரம் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர் சண்முகசுந்தரத்திற்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ராதிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 மாத கைக்குழந்தையும் உள்ளது. இவர்களோடு உடல்நிலை சரியில்லாத தந்தை பாண்டியன் தாய் புவனேஸ்வரி உள்ளனர். இந்த ஒட்டு மொத்த குடும்பமும் சண்முகசுந்தரத்தின் வருவாயை மட்டுமே நம்பி இருந்தது. அதில் இடிபோல் விழுந்துள்ளது இந்த விபத்து. குடும்பத்தின் ஒட்டு மொத்த பாரத்தையும் ஏற்றுக்கொண்டு சென்னையில் ஐஸ் கம்பெனி ஒன்றில் கடந்து இரண்டு ஆண்டுகளாக சண்முகசுந்தரம் பணியாற்றி வந்துள்ளார். இவரது வருமானம் ஒன்றே ஒட்டு மொத்த குடும்பத்தின் வாழ்வாதரத்திற்கு வழி வகுத்து வந்துள்ளது. இனி என்ன செய்வது என வழி தெரியாமல் திகைத்து போயுள்ளது அக்குடும்பம்.

இனி அப்பா வரமாட்டார் என என் குழந்தைகளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன். எங்கள் குழந்தைகளுக்காகவது அவர் பிழைத்திருக்கலாமே ? ‘ என அவரது மனைவி ராதிகா கதறி அழும்போது படைத்தவனுக்கு மனசாட்சி இல்லையா ? கேட்க தோன்றுகிறது. மற்றொரு பக்கம் சண்முகசுந்தரத்தின் தாயார், ’எங்களுக்காகவே உழைத்து உழைத்து வாழ்ந்தவன், ஓரேடியாக போய் விட்டானே, இப்படி பிணமாக வருவான் என கனவில் கூட நினைக்கவில்லையே ? ‘ என கண்ணீருடன் அமர்ந்து இருக்கும் காட்சி பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது.

ஒட்டுமொத்த குடும்பமும் கதி கலங்கி போய் உள்ள நிலையில் பன்னிரென்டாம் வகுப்பு வரை படித்து இருக்கும் சண்முகசுந்தரத்தின் மனைவி ராதிகாவிற்கு அனைவருக்குமான அரசாக செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கருணை உள்ளத்தோடு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்பாக உள்ளது.

பொன்னமராவதி ச.கார்த்திகேயன்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.