டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயரில் மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபர்களை போலீஸ் கைது எப்படி என்பதனை விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.
காணாமல் போன உறவினரைக் கண்டுபிடிக்க, காவல்துறையை அணுகினால், தாமதம் ஆகும் எனக்கருதி, தனியார் டிடெக்டிவ் ஏஜன்சியை, அணுகியபோது, தேடுவதுபோல நடித்து ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்து மோசடி செய்து வந்த டிடெக்டிவ் ஏஜென்சி உரிமையாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் 35 வயதான கிறிஸ்டோபர். இவரது உறவினர் ஒருவர் சமீபத்தில் காணாமல் போன நிலையில், அவர் எங்கு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளவும், அவரை கண்டு பிடித்துக் கொடுக்கவும், தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியை தொடர்பு கொண்டுள்ளார்.
உறவினரைக் கண்டுபிடித்துத் தர ரூ. 25 ஆயிரம் கட்டணமாகத் தரவேண்டும் எனக்கூறிய டிடெக்டிவ் ஏஜெண்டுகளான 30 வயதான சதீஷ்குமார், 24 வயதான வசந்த ஆகியோர், கொஞ்சம் கொஞ்சமாக சில ஆயிரங்களை வசூலித்துள்ளனர். பல நாட்கள் ஆகியும், உறவினரைக் கண்டுபிடித்துத் தராததால், சந்தேகம் அடைந்த கிறிஸ்டோபர், ஏஜண்டுகளிடம் விசாரித்த போதுதான், உறவினரைத் தேடாமலே, கட்டணம் வசூலித்து வந்தது தெரியவந்தது. இது குறித்து, திருச்சி சைபர் க்ரைம் போலீசில் கிறிஸ்டோபர் புகார் கொடுத்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘ஐஐடி கேம்பஸ் இண்டர்வியூ; மாணவர் ஒருவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை’
புகாரின் பேரில், சைபர்கிரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அன்புச்செல்வன் மற்றும் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், விசாரணை மேற்கொண்டனர். டிடெக்டிக் ஏஜன்சி நடத்தி வந்த, சதீஷ்குமார், வசந்த், ஆகியோர், எந்த புகார் கொடுத்தாலும், காவல்துறையை விட, விரைவாக விசாரணை நடத்தி, தீர்வு காண்பதாகக் கூறி வந்துள்ளனர். இதை நம்பி, பொது மக்கள் பலரும், புகார்களைக் கொடுத்துத் தீர்வு காணும்படி கேட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களை, போலீசை விட விரைவாகக் கண்டுபிடித்துக் கொடுப்பதாகவும், காவல்துறையை விட அதி நவீன தகவல் தொடர்பு கருவிகளையும், அதிக நபர்களையும் வைத்து, விரைந்து கண்டுபிடித்துத் தருவதாகவும் கூறி வந்துள்ளனர். ஆனால், புகார் கொடுத்த பிறகு, பெயரளவில் விசாரணை நடத்துவதாகக் கூறி மோசடி செய்து பணம் வசூலித்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயரில், நூதன முறையில் மோசடி செய்து வந்த இருவரையும் கைது செய்தனர். பொது மக்கள், தங்கள் பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க வேண்டும் என்பதற்காக, இது போன்ற தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், போலீசாரிடம் முறையாகப் புகார் கொடுத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.








