தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு பிரதமர் ஆறுதல் கூட கூறவில்லை. இது தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார் அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் ஆன மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சீர்காழியில் பெய்த கனமழை காரணமாக எல்லா பகுதிகளிலும் நீர் சூழ்ந்த பகுதியாக ஒட்டுமொத்தமாக மின் இணைப்பு பாதிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து மின்துறை அமைச்சர் அவர்களை நேரடியாக இந்த களத்திற்கு அனுப்பி வெளி மாவட்டங்களிலிருந்து மின் துறை சார்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது எனப் பேசினார்.
மேலும், 206527 மின்னிணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் 36 மணிநேரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குத் துரித நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர்,மின்துறை அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை சார்ந்த ஊழியர்கள் அனைவருக்கும் இந்த மாவட்ட மக்களின் சார்பாக எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். சீர்காழி பகுதியில் உப்பனாரும், கழுமலையாறும்தான் வடிகாலாக உள்ளது. இந்த இரண்டு ஆறுகளின் சராசரி அளவு 2700 கன அடி மட்டுமே, ஆனால் கனமழை அன்று 25,000 கன அடி அளவிற்குத் தண்ணீர் வந்ததால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம் என கூறினார்.
இந்த பாதிப்புகளில் அனைத்து துறை அத்திரிகளும் சிறப்பாக பணியாற்றிப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுப் பாதுகாப்பாகத் தங்க வைக்கின்ற பணிகளை மேற்கொண்டார்கள். கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை எல்லாம் நேரில் ஆய்வு செய்த முதல்வர் சென்னை திரும்புவதற்கு முன்னதாக ரூபாய் 1000 நிவாரணம் அறிவித்துள்ளார்.சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றார்.
அத்துடன், வீடுகள் பாதிப்புக்கு ஏற்றவாறு தனி நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது அன்படி 3867 வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளது.மாடுகள்,கன்று, ஆடுகள் கோழி என 2209 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. தற்போது வரை 21 இடங்களில் நிவாரண முகாம்களில் 5824 குடும்பங்களைச் சேர்ந்த 14,620 பேருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது என கூறினார்.
மேலும், தமிழகம் முழுவதும் தூர்வாரும் பணிகள் முடிவடைந்த பின்னரே மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார்.அந்த அளவிற்குத் தூர்வாரும் பணிகள் நேர்மையாகவும் முழுமையாகவும் நடைபெற்றது 122 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பகுதியிலே மிக கனமழை பெய்திருக்கிறது. தமிழக முதலமைச்சர் அவர்கள் இங்கே அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியதுடன் முதலமைச்சர் நேரடியாகக் கள ஆய்வு செய்து இந்த திட்டங்களை அறிவித்திருக்கிறார் என்றார்.
இந்தியாவுக்குள் தான் தமிழ்நாடு இருக்கிறது இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிமிடம் வரை பிரதமர் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை அதே சூழலில் இந்த பாதிப்பு மற்ற வட மாநிலங்களில் ஏற்பட்டு இருந்தால் பிரதமர் அவர்கள் உடனடியாக பார்வையிட்டு அதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருப்பார். அப்படி எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கீடும் இதுவரை செய்யாத நிலையில் அண்ணாமலை உன்மைக்குப் புறமாகப் பேசி வருகிறார் எனவும் தெரிவித்தார்.








