முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை – CBI வைர விழாவில் காங்கிரஸை சாடிய பிரதமர் மோடி!

முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை என டெல்லியில் நடைபெற்ற மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின்…

முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை என டெல்லியில் நடைபெற்ற மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின் 60-வது ஆண்டு வைர விழா இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சிறப்பு சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கமும், சிபிஐயின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கான தங்கப் பதக்கமும் வழங்கி சிறப்பாக பணியாற்றியவர்களை கௌரவித்தார்.

பின்னர் சிபிஐ அதிகாரிகளின் செயல் குறித்து பிரதமர் மோடி பேசும்போது “சிபிஐ சாதாரண குடிமகனுக்கு நம்பிக்கையையும் வலிமையையும் அளித்துள்ளதாகவும், சிபிஐ நீதிக்கான முத்திரையாக உருவெடுத்துள்ளதால் தான், எந்த ஒரு பிரச்னை வந்தாலும் சிபிஐ விசாரணை கோரி மக்கள் போராட்டங்களை நடத்துகிறார்கள்,” என்று கூறினார்.

மேலும் காங்கிரஸ் மீது கடுமையான தாக்குதலை மறைமுகமாக தொடுத்த பிரதமர் மோடி , “முந்தைய அரசுகள் ஊழல்களுக்குப் பெயர் பெற்றவை, 10 ஆண்டுகளுக்கு முன், அதிகளவில் ஊழல் செய்ய இங்கு போட்டி இருந்தது. அதனால் பெரிய மோசடிகள் நடந்தன, ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பயப்படவில்லை, ஏனெனில் அமைப்பு அவர்களுக்கு ஆதரவாக நின்றன. ஆனால் 2014-க்குப் பிறகு, ஊழல், கறுப்புப் பணம் ஆகியவற்றுக்கு எதிரான பணியை நாங்கள் மேற்கொண்டோம். அந்த வகையில் இப்போது நீங்கள் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறீர்களோ அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும், அவர்கள் பல ஆண்டுகளாக
அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். இன்றும் அவர்கள் சில மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர். ஆனால் நீங்கள் (சிபிஐ) உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். ஊழல்வாதிகள் யாரும் தப்பக்கூடாது” என்று பிரதமர் மோடி கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் உள்ள சிபிஐயின் புதிய அலுவலக வளாகங்களையும் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்ததோடு, சிபிஐயின் வைர விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, தபால் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.