2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரில், பழைய நாடாளுமன்ற கட்டடத்திலேயே குடியரசு தலைவர் உரையாற்றுவார் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ம் தேதி நிறையவடைய உள்ளது. முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 13-ம் தேதி நிறைவடையும். பின்பு மார்ச் மாதம் 13-ம் தேதி மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி நிறைவடைய உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும். குடியரசு தலைவர் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றுவார் என தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக புதிய நாடாளுமன்றத்தின் புகைப்படங்களை மத்திய அரசு வெளியிட்டது. இந்த புகைப்படங்கள் வெளியானதால் இந்த கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் எ எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா தனது ட்விட்டர் பக்கத்தில், குடியரசு தலைவர் பழைய நாடாளுமன்ற கட்டடத்திலேயே உரையாற்றுவார் என கூறியுள்ளார். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டட பணிகள் இன்னும் முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இன்னும் கட்டட பணிகள் நிறைவடையவில்லை.