இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றுவதற்கு சில மணி நேரம் முன்பாகவே அதிபர் கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து தப்பியுள்ளார்.
இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
பல்வேறு வாக்குறுதிகளை அளித்த அதிபர் கோத்தபய ரஜபக்ச, அவற்றை நிறைவேற்றாததால் பதவி விலக வலியுறுத்தி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அவரது மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் ஆதரவு அளித்தன.
இதையடுத்து, பேருந்துகள், ரயில்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இன்று அதிபர் மாளிகையை நோக்கி திரண்டனர்.
மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வந்தபோது, அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகைக்குள் இருந்துள்ளார்.
எனினும், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியதால், அதிபர் மாளிகை வளாகம் பெரும் பதற்றத்திற்குள்ளானது.
கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை போலீசார் வீசினர். எனினும், கூட்டம் கலையவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்றதால், பாதுகாப்பு அதிகாரிகள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை பாதுகாப்பாக வெளியேறும்படி தெரிவித்துள்ளனர்.
இதையடுத்தே, அதிபர் மாளிகையை விட்டு வெளியேற கோத்தபய ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.
அதிபர் மாளிகையை விட்டு வெளியேறும் முன்பாக, மாளிகையில் இருந்து எடுத்துச் செல்ல வேண்டிய மதிப்பு மிக்க பொருட்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கப்பலில் ஏற்ற அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பல்வேறு சூட்கேஸ்களில் அவை நிரப்பப்பட்டு, கொழும்பில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கஜபாகு கப்பலில் ஏற்றப்பட்டன.
பின்னர் அதிபர் மாளிகையில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய கோத்தபய ராஜபக்ச, கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
வெளிநாட்டுக்குச் சென்றாலும், தான்தான் இலங்கையின் அதிபர் என முக்கிய நிர்வாகிகளிடம் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் பேசிய கோத்தபய ராஜபக்ச, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும், அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தான் மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கோத்தபய ராஜபக்ச எந்த நாட்டிற்கு சென்றார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.














