மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக எழுந்த புகாரின் பேரில், பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு பாஜக-வின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி தனது டிவிட்டர் பக்கத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். மேலும், மதக்கலவரத்தை தூண்டும் வீடியோவை பகிர்ந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். எனினும் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சூளைமேடு வீட்டில் வைத்து சைபர் கிரைம் போலீசார் சவுதாமணியை கைது செய்தனர். அவரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்








