நகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்

நகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடிநீர்த் தொட்டி வளாகத்தில், 5 லட்சம்…

நகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடிநீர்த் தொட்டி வளாகத்தில், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டும் பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர் நேரு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,

“தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு அடுத்தபடியாக நகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது அதற்கான ஆரம்பக்க்கட்ட பணிகளை துவங்கி விட்டோம்.

அதிமுக ஆட்சியில் இருந்த போது எப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தினார்களோ ( விதிமுறைகளை பின்பற்றி ) அதே போல்தான் நாங்களும் தேர்தலை நடத்தினோம். ஆனால் அவர்கள் தேர்தல் நடத்திய போது நாங்கள் எல்லாம் சிறையில் இருந்தோம். திருப்பத்தூரில் 4 வாக்கு வித்யாசத்தில் திமுக தோல்வி அடைந்துள்ளது. மிக மிக நேர்மையான முறையில் திமுக அரசு இந்த தேர்தலை நடத்தி உள்ளது. அதற்கான எடுத்துக்காட்டுதான் இது.

ஏற்கனவே ஒதுக்கியபடி விதிமுறைகளை பின்பற்றிதான் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் தோல்விக்கான காரணத்தை அதிமுக தேடி கண்டுபிடித்து சொல்கிறது. 28 இடத்தில் அதிமுக எப்படி வெற்றி பெற்றார்கள்? அதற்கு பதில் சொல்ல வேண்டும்.” என்று கூறினார்.

மேலும், பாஜக வலியுறுத்திதான் வாரத்தின் இறுதி நாட்களில் ஆலயங்களை திறந்தீர்களா என்ற கேள்விக்கு, “பக்தர்களின் நலன்கருதி வாரத்தின் இறுதி நாட்களில் கோவில்களில் திறக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்ததை தெரிந்துகொண்டுதான் பாஜகவினர் போராட்டம் நடத்தினார்கள். திறந்த பின்னர் நாங்கள் சொல்லித்தான் திறந்தோம் என்று கூறுகிறார்கள்.” என்றும் பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.