போராட்டம் வாபஸ்: ஆட்டம் பாட்டத்துடன் ஊருக்குத் திரும்பும் விவசாயிகள்

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் கூடாரங்களை காலி செய்துவிட்டு வீடு திரும்பி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி,…

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் கூடாரங்களை காலி செய்துவிட்டு வீடு திரும்பி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தை அடுத்து, அந்த சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. பிரதமர் மோடி, அந்தச் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

நாடாளுமன்றத்திலும் அந்தச் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வேண்டும் என்றும் விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால், போராட்டத்தை முடித்துக் கொள்வதாக விவசாய சங்கத்தினர் அறிவித்தனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள சிங்க் (ஹரியானா – டெல்லி எல்லை), காஸிபூர், திக்ரி எல்லைகளில் ஒரு வருடத்துக்கும் மேல் முகாமிட்டிருந்த விவசாயிகள் வீடு திரும்பும் பணிகளில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து வந்த விவசாயிகள் தங்கள் கூடாரங்களை அகற்றி, வைத்திருந்த பொருட்களை டிராக்டர்களில் ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். சிலர் பாங்ரா நடனம் ஆடினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பினர். பெண் விவசாயிகளும் அவர்களுடன் இணைந்து ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியாக சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.