மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் இறுதிச் சடங்கு கீழ்ப்பாக்கம் வேலங்காடு மயானத்தில் நடைபெற்றது.
பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை காலமானார். அவரது உடல் கீழ்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் ,திரைத் துறையினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் பிரதாப் போத்தனின் உடல் இல்லத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் வேலங்காடு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கிறிஸ்தவ முறைப்படி மலர் வளையம் வைத்து பிரார்த்தனை மேற்கொண்டு, இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.
இரண்டாவது நாளாக கீழ்ப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பிரதாப் போத்தன் உடலுக்கு நடிகர் சத்யராஜ், நடிகை ரேவதி, சின்னி ஜெயந்த், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் நேரில் தற்போது அஞ்சலி செலுத்தினர்.
கண்கலங்கிய சத்யராஜ்: பிரதாப் போத்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சத்யராஜ், பிரதாப் போத்தன் அருமையான நடிகர், இயக்குநர். எனது நெருங்கிய நண்பர் பத்து நாட்களுக்கு முன்னால் கூட என்னிடம் பேசினார். என்னை யாராவது உரிமையுடன் கிண்டல் செய்தால், திட்டினால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னை உரிமையுடன் திட்டுபவர் பிரதாப். அவர் கொடுத்த செயின் தான் இது. நான் கழுத்தில் அணிந்துள்ளேன் என கண் கலங்கிப் பேசினார்.
நடிகர் சின்னி ஜெயந்த் : பிரதாப் போத்தன் தினசரி 50 நபரிடம் பேசுவார்.அவருடன் 4 படம் நடித்துள்ளேன். நல்ல நண்பர் நல்ல நடிகர். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்
இயக்குநர் வெற்றிமாறன்: பிரதாப் போத்தனின் இழப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு. நானும் பிரதாப் போத்தனும் பாலு மகேந்திராவின் மாணவர்கள். இயக்குநராக பிரதாப் போத்தன் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவருடன் இணைந்து பணியாற்றுவதாகத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், நடக்காமல் போய்விட்டது.
-ம.பவித்ரா








