துப்பாக்கியால் சுட்டு காவலர் உயிரிழப்பு- ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த சோகம்

கோவையில் சிறைச்சாலை மைதானத்தில் பாதுகாப்பிற்கு நின்ற காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரியந்த சம்பவத்திற்கு பின்னால், அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை ஏமாந்தது தெரியவந்துள்ளது.   கோவையில் உள்ள சிறைச்சாலை…

கோவையில் சிறைச்சாலை மைதானத்தில் பாதுகாப்பிற்கு நின்ற காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரியந்த சம்பவத்திற்கு பின்னால், அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை ஏமாந்தது தெரியவந்துள்ளது.

 

கோவையில் உள்ள சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் அனைத்து துறைகளின் சார்பில் தங்கள் திட்ட சேவைகளை காட்சிப்படுத்த அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 

கோவை மாநகர காவல்துறை சார்பிலும் அங்கு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கில் கோவை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் விருதுநகரை சேர்ந்த காளிமுத்து (வயது 29) என்பவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நேற்று பிற்பகலில் அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. உடனே அங்கு கூடியிருந்தவர்கள் பார்த்தபோது, காளிமுத்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

 

உடனே அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காளிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

கடன் தொல்லை காரணமாகதான் காளிமுத்து, தன்னிடம் இருந்த எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கியால் வயிற்றில் சுட்டதும், வலதுபுற வயிற்றில் பாய்ந்த தோட்டா, பின்புறம் முதுகுவழியாக வெளியே வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கமிஷனர், காளிமுத்து சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காளிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இந்நிலையில், இது தொடர்பான விசாரணையில் காளிமுத்துவுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அதில் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்த அவர், மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடன்சுமை அதிகரித்ததும் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்  கொண்டது தெரியவந்தது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.